1940 ம் வருடம் ஒரு செப்டம்பர் மாதத்தில்...
.
சுமதி திருச்சி இரயில் நிலையத்தில் ஐலேன்ட் எக்ஸ்பிரஸின் சாதா இருக்கை
கம்பார்ட்மென்ட்டின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள்... அவளுடைய
கணவன் ராம் வெளியே தண்ணீர் பிடிக்க போயிருக்க.. அருகில் அவளின் 8
வயது மகள் கையில் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இரயில் ஓரளவுக்கு
காலியாகவே இருந்தது.
.
எதிர் இருக்கையில் ஒரு அறுபது வயது
மதிக்கத்தக்க பெரியவர் வந்தமர்ந்தார். நரைத்த முடியுடன் நெற்றியில்
நாமமிட்டிருந்தார்.. மூக்கு கண்ணாடியை கழட்டியவாறே கேட்டார்..
.
"உன் பேர் என்னம்மா கண்ணு.. "
.
"ஜெயா தாத்தா"
.
என்ன படிக்கிறீங்க
.
"மூணாவது.."
.
ராம் தலையை பிடித்தப்படியே கையில் தண்ணீர் பாட்டிலுடன் கேபினுக்குள் நுழைந்தார்..
.
என்னங்க ஆச்சு..
.
தண்ணி பிடிச்சுட்டு வரும் போது கால் ஸ்லிப் ஆயி சிமின்ட் பெஞ்ச்ல இடிச்சுக்கிட்டேன்.. நல்ல வேள கீழ விழல...
.
யாரோ ஒரு ரெயில்வே ஊழியர் அங்கு தொங்கவிட்டிருந்த தண்டவாள துண்டில் இரும்பு துண்டால் மூன்று முறை அடித்தார்..
.
இரயில் மெல்ல நகரத்துவங்கியது..
.
பெரியவர் மெல்ல ராமிடம் பேச்சு கொடுத்தார்..
.
" நான் ஈரோட்ல ஒரு கல்யாணத்துக்கு போறேன்.. நீங்க சார்.."
.
நாங்க திருச்சூர் போறோம்.. நண்பர் கல்யாணம்..
.
ஓஹோ..
.
திருச்சூர் நல்ல ஊர்.. பச்ச பசேல்ன்னு இருக்கும்.. நண்பர்ன்னா கூட வேல செய்றாரா..
.
இல்ல எங்க கடைக்கு அப்பளம் சப்ளை பண்றார்.. ரொம்ப நல்ல மனுசன்.. எங்க குழந்தை இன்னிக்கி உயிரோட இருக்குன்னா அவர் தான் காரணம்..
.
ஓ.. ஏன் என்னாச்சு பாப்பாக்கு..
.
ஒரு நாள் கொட்டுற மழையில எங்க வீட்டுக்கு ராத்திரி பதினோரு மணிக்கு வந்து
உங்க குழந்தைய கூட்டிக்கிட்டு வெளியூர் எங்கயும் போகாதீங்கன்னு சொன்னாரு..
அடுத்த நாள் என் மக ஸ்கூல்ல கல்லணைக்கு பிக்னிக் போறதா இருந்துச்சு.
அவளுக்கு அன்னைக்கு கீழ விழுந்து அடி பட்டிருந்தது.. நாங்களும் அணுப்பணுமா
வேணாமான்னு தான் இருந்தோம்.. அவரு வந்து சொன்னது ரொம்ப அதிர்ச்சியாத்தான்
இருந்தது.. நாங்க அனுப்பல... நிறைய பேருக்கிட்ட விசாரிச்சு ரொம்ப
கஷ்ட்டப்பட்டு தான் வந்திருந்தாரு..
.
ஆனா அடுத்த நாள் ஸ்கூலோட
மேட்டடோர் வேன் கவுந்து காவேரில விழுந்துடுச்சு. எட்டு குழந்தைங்க
இறந்துடுச்சு.. பேப்பர்ல படிச்சிருப்பீங்களே..
.
ஆமா ஆமா நான் கூட படிச்சேன்.. நீங்க சொல்றது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. அவரு என்ன ஜோஸ்யக்காரரா.. அப்பளக்காரா..
.
நாங்க கூட எப்படி சொன்னீங்கன்னு கேட்டோம்.. தோணுச்சுன்னு சொன்னாரு..
.
கருப்பு புகையை கக்கிக்கொண்டே கரூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்துகொண்டிருந்தது..
.
நீங்க வெளியெல்லாம் போகாதீங்க ஏற்கனவே சகுனம் சரியில்ல.. கரூர்ல கும்பல்
ஏறினாலும் ஏறும்.. நானும் பாப்பாவும் படுத்துக்கறோம்.. இங்கயே இருங்க..
சுமதி எச்சரித்தாள்..
.
சுமதிக்கு பயணம் துவங்கும் போது இருந்த சந்தோஷம் இப்போது காணாமல் போய் ஒரு வித பதட்டம் தொற்றிக்கொண்டது..
.
திருச்சூர் இரெயில் நிலையம்.. அதிகாலை 3:50..
.
மிக சொற்பமானவர்களே ப்ளாட்பார்மில் தென்பட்டார்கள்.. போர்வை போர்த்தியபடி
ஆங்காங்கே சிலர் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.. இரண்டே இரண்டு ப்ளாட்பார்மோடு
திருச்சூர் இரெயில் நிலையம் பனி விழும் அதிகாலை நேரத்தில் ரம்மியமாக
இருந்தது..
.
நீ இங்க உக்காரு.. நான் போய் விசாரிச்சுட்டு வரேன்..
.
ஸ்டேஷன் மாஸ்டர் ரூமை நோக்கி சென்றார் ராம்.
"குன்னங்குளத்துக்கு இங்கருந்து பஸ் இப்ப இருக்குமா.. "
.
ஸ்டேஷன் வாசல்ல ஒரு பஸ் நிக்கிது பாருங்க.. அது தான் போகும்.. ஆனா அஞ்சு மணிக்கு தான் கிளம்பும்..
பக்கத்துல கவர்மென்ட் பஸ் ஸ்டான்ட் இருக்கு அங்கருந்து எர்ணாங்குளத்துலருந்து வரும் பஸ் கிடைக்கும்.. ஒரு கிலோமீட்டர் தூரம் தான்..
.
தாங்ஸ்ங்க..
.
குழந்தை ஜெயா அம்மாவின் மடியில் தலை வைத்து சிமின்ட் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்தாள் ..
.
"சுமதி வாசல்ல இருக்கிற பஸ்லயே போயிரலாம்.. அது வரைக்கும் இங்கயே இருப்போம்.."
.
சற்று நேரத்தில் பஸ்ஸில் லைட் போட இவர்கள் பஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்..
.
பம்பாய் எக்ஸ்பிரஸ் வந்ததும் பஸ் நிரம்பியது..
.
குன்னங்குளம்.. 5:45
.
ஏங்க இப்ப அவரோட ஊருக்கு பஸ்ல போகணுமா..
.
இல்ல ஆட்டோல வரச்சொன்னார்... சொவ்வன்னூர் இங்கருந்து இரண்டு மூணு கிலோ மீட்டர் தான்னு சொன்னார்..
.
ஆட்டோவில் ஏறினார்கள்..
.
சார் சொவ்வன்னூர்ல எங்க..
.
சொவ்வன்னூர்ல கூத்தூர் வீடுன்னு சொன்னார்..
.
கூத்தூர் வீடா.. ஓ பாட்டுரும்பன் வீடா.. கல்யாணத்துக்கு போறீங்களா..
.
ஆமா.. உங்களுக்கு அவர தெரியுமா..
.
என்னங்க ஊருக்கே தெரியும்.. கூத்தூர்ங்கறது அவுங்க வீட்டுப்பேரு.. ஆனா
பாட்டுரும்பன்னு சொல்லித்தான் அவுங்க குடும்பத்துல இருக்கிறவங்கள எல்லாரும்
கூப்பிடுவாங்க..
.
ஏன் அப்படி கூப்புடுறாங்க..
.
அவுங்களோட வீட்டுக்கு பின்னாடி இருக்கிற தோட்டத்துல சாத்தன் ராத்திரியில
பாட்டு பாடி நடக்குமாம்.. அவுங்க பாரம்பரியமாவே சாத்தன சேவிக்கிற
குடும்பம்..
.
சாத்தன்னா..
.
அதாங்க குட்டிச்சாத்தன்...
(தொடரும்)
-------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இந்த கதை முகநூல் நண்பர் திரு. ஷாஜு சாக்கோ அவர்களது முகநூல்
பக்கத்திலிருந்து ( https://www.facebook.com/groups/1671853019753122)
அவரது அனுமதியுடன் இங்கே பதிவிடப்பட்டிருக்கிறது. குட்டிசாத்தான் பற்றிய
இந்த தகவல்களை கதை போல் எழுதினாலும் நிறைய விஷயங்கள் உண்மையில்
நடந்தவைகளே என்று கூறுகிறார்.