Sunday, July 13, 2014

அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்


ரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.



அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன.இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது. 



இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான், "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" என்று வர்ணித்தார் என்றால் , சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். எனினும் , நாம் முதன் முதலில் இந்தப் பழம்பெரும் பதிக்குச் செல்லும் சமயத்தில் அதைப் பூரண கோலாகலத் தோற்றத்துடன் கொடுத்து வைத்திருக்கவில்லை. சக்கரவர்த்தி நோய்ப்பட்டுத் தஞ்சை மாநகர் சென்ற பிறகு வெளிநாடுகளிலிருந்து சிற்றரசர்களும் இராஜ தூதர்களும் மந்திரிப் பிரதானிகளும் சேனாதிபதிகளும் இங்கு வருவது நின்று போயிற்று. அவர்களுடன் வழக்கமாக வரும் பரிவாரங்களின் கூட்டமும் குறைந்து விட்டது. 



நாலு படை வீடுகளிலும் வசித்த போர் வீரர்களில் பாதிப் பேர் இப்போது ஈழ நாட்டுப் போர்க்களங்களில் தமிழர் வீரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் ஒரு பகுதியார் வடதிசை எல்லையிலும் இன்னொரு பகுதியினர் மதுரையிலும் இருந்தார்கள். எனவே , படைவீட்டுப் பகுதிகளில் இப்போது பெரும்பாலும் வயோதிகர்களும் பெண்மணிகளும் சிறுவர் சிறுமிகளுமே தஞ்சைக்குச் சென்று விட்டபடியால், நகரின் அப்பகுதியானது பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சென்று இருந்தது. இராஜாங்க காரியங்களை நடத்தி வந்த அமைச்சர்கள், சாமந்தகர்கள், அதிகாரிகள் அனைவரும் தத்தம் குடும்பத்தோடு தஞ்சைபுரிக்குச் சென்று விட்டார்கள். இப்படியெல்லாமிருந்த போதிலும் பழையாறை வீதிகளில் கூட்டத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை!

# பொன்னியின் செல்வன்

0 comments:

Post a Comment