சீனாவுடன் 1960 களில் நடந்த போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது. அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு
அனுப்பியது. என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம்.
அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார்.
அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது. இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியாக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் இணைத்து விட்டார்.
தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார். அமெரிக்காவின் இந்த சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்தது. அதற்கு பிறகு சிறிது சிறிதாக இந்தியா அப்போதைய சோவியத் யூனியனுடன் நெருங்கி செல்ல ஆரம்பித்தது. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்!
0 comments:
Post a Comment