"ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்"னு ஆற்காடு நவாபுகிட்ட வெள்ளக்காரன் கேட்டான். கடல் தாண்டி யாவாரம் பண்ண வந்தவங்களுக்கு இது கூடவா செய்யக்கூடாதுனு நெனச்சு. "சரி, எந்த எடம் வேணும்?"னு நவாபு கேட்டாரு. வெவரமான வெள்ளக்காரன், கையோட கொண்டுவந்த ஆட்டுத்தோல அவருக்கு முன்ன விரிச்சுக் காட்டினான்.
அதுல ஊரு, ஆறு, குளங்குட்ட, கடலு, மல, ரஸ்தா எல்லாமே கோடு கோடா வரஞ்சிருந்தாங்க. அதுல... ஆத்து ஓரமா இருக்கற ஒரு எடத்தக்காட்டி, "இந்த எடம் குத்தகைக்கு வேணும்"னு வெள்ளக்காரன் கேட்டான். "ஆட்டுத்தோலால வருது நாட்டுக்கு நட்டம்"னு அப்போ நவாபுக்கு தெரியாது. "சரி"னு சொல்லிட்டாரு.
"இனி நீங்க சனங்ககிட்ட வரி வசூல் பண்ணி கஷ்டப்பட வேணாம்... நாங்களே பண்ணிக்கறோம். இந்தா பிடிங்க ரொக்கப் பணம்"னு நவாபுக்கு கடன் கொடுத்தாங்க. "குதிரை, யானை, பூனைய எல்லாத்தையும் நாங்களே மேச்சுக்கறோம்"னு அதுக்கும் பணத்த கொடுத்த வெள்ளைக்காரன், நவாபுகிட்ட இருந்த அம்புட்டையும் கிட்டத்தட்ட ஏச்சு வாங்கிப்போட்டான்.
குட்டிக் குட்டி ராசாகிட்ட கலகத்தை தூண்டிவிட்டு அவங்களையும் வெரட்டி நாட்டையும் சேனையையும் சேத்துக்கிட்டான்.
ராசாக்களை எல்லாம் ஒழிச்சான். கோட்டை கொத்தளங்க அம்புட்டையும் இடிச்சான். எல்லா பாளயப்பட்டக்காரங்களுக்கும் "நெரந்தர நிலத்தீர்வைத் திட்டம்"னு கொண்டுவந்தான் வெள்ளக்காரன்.
மதுர மீனாட்சி கோபுரத்தையும் சிவகெங்கை சேனை ஆட்களையும் கருப்பு மல்லிகைப் பூ மாதிரி சுயலெட்சணமா இருந்த பொம்பளைகளையும், மலைல வெளையுர ஏலங்கிராம்பு, வாசனைத் திரவியம், தேனு, தேனமாவுனு தின்பண்டத்தையும் பாத்து அனுபவிச்ச வெள்ளக்காரன் பாளயக்காரங்களுக்கு நெலத்தப் பிரிச்சுக் குடுத்து வருமானத்தப் பெருக்கணும்னு முடிவு பண்ணிட்டான். பணிஞ்சு போன பாளயக்காரங்களுக்கு "ஜமீன்தார்"னு பேர் வச்சாங்க !!!
# வருஷ நாட்டு ஜமீன் கதை
0 comments:
Post a Comment