Monday, July 07, 2014

சதுரகிரி மலைக்கு ஒரு பயணம்



வருடத்துக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சதுரகிரி மலைக்கு சென்று வருவது வழக்கம். பரபரப்பு நிறைந்த நகர வாழ்கையிலிருந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கும் பயணம் இது. சதுரகிரி மலையில் மின்சாரம் இல்லை, செல்போன் இல்லை, பீசா, பர்கர் இல்லை, கோக், பெப்சி இல்லை... அவ்வளவு ஏன்... பால் கலந்த தேநீர் கூட கிடைக்காத இடம் சதுரகிரி மலை.  அங்கே எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத மலைக்காட்டில் கிடைக்கும் இயற்கையோடு இணைந்த அந்த அனுபவத்தைசொன்னால் புரியாது. அதை அனுபவித்து தான் உணர முடியும்.



சதுரகிரிக்கு செல்ல பல வழிகள் இருந்தாலும் தாணிப்பாறையிலிருந்து தொடங்கும் மலைப்பாதை தான் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. சென்னையிலிருந்து செல்பவர்களுக்கு விருதுநகர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அங்கிருந்து வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை செல்வதுதான் சிறந்தது. சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் இறங்கவேண்டும் அல்லது முத்துநகர் எக்ஸ்பிரஸில் சென்றால் விருதுநகர் இறங்க வேண்டும். தாணிப்பாறை என்ற இடத்திலிருந்து தான் சதுரகிரிக்கான மலைப்பாதை தொடங்குகிறது. வழக்கமாக நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாகத்தான் எப்பொழுதும் போவோம். அது தான் மிகவும் வசதியாகவும் இருக்கும். இந்த முறை ரயிலில் நாங்கள் புறப்படும் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்பதிவு கிடைக்கவில்லை. அதனால் விருதுநகருக்கு முன்பதிவு செய்து விட்டோம். விருதுநகரில் இறங்கி அங்கிருந்து தான் தாணிப்பாறைக்கு செல்லவேண்டும். இந்த வழியில் இதுவரை சென்றதில்லை, இது தான் முதல் முறை.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் தாணிப்பாறை என்ற வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து சுமார் 12 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்றால் சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரி மலையை அடையலாம். மலைப் பயணத்திற்கு தேவையான தண்ணீர், க்ளுகோஸ், சாக்லேட்டுகள், முதலியவற்றை கையோடு கொண்டு செல்வது நல்லது. மலையில் இரவில் தங்குவதற்கு விரும்புபவர்கள் அவசியம் ஒரு டார்ச் லைட் எடுத்துக்கொண்டு போக வேண்டும். வேகமாக மலையேறாமல் மிகவும் நிதானமாக ஏறினால் களைப்பின்றி விரைவில் சென்று விடலாம். காலையில் 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக தாணிப்பாறையிலிருந்து நடக்கத் தொடங்கினால் மதியம் 12 அல்லது 1 மணிக்குள்ளாக சென்று விடலாம்.

முதல் முறையாக மலை ஏறுபவர்களுக்கு 5 - 6 மணி நேரம் வரை ஆகும். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கே செல்பவர்கள் அதிகம். எனவே முதன் முதலாக செல்பவர்கள் அந்த நாட்களில் செல்வது நல்லது. மலையில் அங்காங்கே சிறிய கடைகள் உள்ளன. அங்கிருந்து சாப்பிடத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். செல்லும் வழியில் ஆங்காங்கே இலவசமாகவே உண்பதற்கு சுண்டல், தயிர்சாதம், பொங்கல் முதலியவற்றை தருகிறார்கள். மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள ஒரு காளி கோவிலிலிருந்தும் மலையின் மேல் உள்ள கஞ்சி மடம் என்ற இடத்திலிருந்தும் அங்கே செல்பவர்களுக்கு இலவசமாகவே எந்த நேரத்திலும் உணவு கிடைக்கிறது. அதனால், கீழே இருந்து உணவு எடுத்துக்கொண்டு சுமந்து செல்ல நேம்டிய அவசியம் இல்லை.  சற்று கடினமான மலைப் பயணம் என்பதால் முடிந்தவரை அதிக எடையுள்ள பொருட்களை  சுமக்காமல் மலை ஏறுவது நல்லது.





Naval Spring
நாவல் ஊற்று
சதுரகிரி மலை ஏறும் வழியில் சில நீரோடைகளும், சிறிய அருவிகளும் உள்ளன. பயணத்தின் பாதி வழியில் நாவல் ஊற்று என்னும் எப்பொழுதும் வற்றாத ஒரு சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது. நல்ல தெளிந்த, சுவையான தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கிறது. அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள், அதிசய மரங்கள், விலங்குகள் நிறைந்த வனம் தான் சதுரகிரி மலை. சதுரகிரி சித்தர்கள் பூமி. பதினெட்டு சித்தர்களும் தவம் செய்த இடம், இப்பொழுதும் அரூபமாக உலவும் இடம் என்று சொல்லுவார்கள். மலைப்பாதையில் 10 - 12 கிலோமீட்டர் வரை நடந்தால் மலை உச்சியை அடையலாம்.

மலை உச்சியில் சுந்தர மகாலிங்கம் கோவில், மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. அதற்கும் மேலே சென்றால் அங்கே வனகாளி கோவில், பெரிய மகாலிங்கம் முதலியவற்றைக் காணலாம். இன்னும் மேலே போனால் தவசிப்பாறை என்னும் ஒரு குகை உள்ளது. அந்த குகையில் சித்தர்கள் இன்றும் அரூபமாக தவம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்ற முறை சதுரகிரி சென்றபோது அங்கு செல்ல சரியான துணை கிடைக்காததால் அந்த குகைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த காட்டில் வசிக்கும் பளியர்கள் என்னும் மலைவாசிகளின் துணையோடுதான் அங்கே செல்ல வேண்டும். மிகவும் ஆபத்தான, செங்குத்தான மலைப்பாதை. வனவிலங்குகள் குறிப்பாக கரடிகள் அங்கே அதிகம் உலாவுகின்றன என்று சொல்கிறார்கள் . இந்த முறை அங்கே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை செல்லும் பொது அங்கேயும் சென்று விட்டு வரவேண்டும்.

இரவில் அங்கே தங்கிவிட்டு வருவது மிகவும் நல்லது. இரவில் சுத்தமான காற்று, மூலிகை மணத்துடன் வீசுகிறது. பத்து கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து விட்டு திரும்பும்போது மூலிகை காற்றை சுவாசித்துவிட்டு, மூலிகை கலந்த சுனை நீரை அருந்திவிட்டு வரும்போது உடலும் உள்ளமும் தூய்மையாகும். தெளிவான மனநிலையும், உடலுக்கு பலமும் கிடைக்கும். சதுரகிரிக்கு சென்று விட்டு திரும்பும்போது ஒரு புதிய உலகத்துக்கு சென்று வந்தது போல தோன்றும். ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது ஆன்மீக சொர்க்க பூமி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு அது ஒரு இனிய மலைப் பயணம். மொத்தத்தில், அனைவரும் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய அருமையான இடம் சதுரகிரி மலை!

0 comments:

Post a Comment