Wednesday, July 09, 2014

சென்னையில் ஷேர் ஆட்டோவில் சுகமான பயணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு இன்று விடியற்காலையில் சென்று இப்பொழுது தான் திரும்பி வந்தோம். போகும்போது சென்னை-எழும்பூர் வரை சுகமான ரயில் பயணம். எழும்பூரிலிருந்து அண்ணா நகர் வரை மாநகர பேருந்தில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் முதன்முதலாக சிறிது தூரம் பயணம் செய்தோம். அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து அண்ணா ஆர்ச் வரை ஒரு நபருக்கு 7 ரூபாய் மட்டுமே கட்டணம். அண்ணா ஆர்ச் வழியாக போகும்போது நிமிர்ந்து பார்த்தால் ஆர்ச்சில் ஒரு பகுதியை மட்டும் புதியதாக பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள்.

சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் கட்டணம் குறைவாகத்தான் இயங்குகின்றன. எல்லாமே புதிய வண்டிகள். சுத்தமாகவும் நல்ல பராமரிப்புடனும் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஷேர் ஆட்டோக்களை விட சென்னையில் ஷேர் ஆடோக்கள் நன்றாக இருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 7 பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். ஆனால் புதுச்சேரியிலோ 12 பேர் வரை திணித்துக்கொண்டு போவார்கள். சென்னையில் ஆட்டோ கட்டணம் புதுச்சேரியை விட சற்று குறைவு தான். திரும்பும் போது ஆட்டோவில் 4 கிலோமீட்டர் வரை சென்றதுக்கு வெறும் 60 ரூபாய் மட்டுமே கேட்டார் ஒரு (பிழைக்க தெரியாத?) ஆட்டோ டிரைவர். அவருக்கு 70 ரூபாயாகக் கொடுத்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் முதல் முறையாக நுழைந்தோம்.  இதுவரை அங்கு செல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு நல்ல காட்சி - கட்டணமில்லா (ஒரளவு சுத்தமான) இலவச கழிப்பறை. ஒரு எரிச்சலூட்டும் விஷயம் - பேருந்து நிலையத்தினுள்ளே கடைகளில் இரண்டு மடங்கு விலை. 25 ரூபாய் MRP விலையுள்ள ஒரு 2 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் விலை 38 ரூபாய் கேட்ட ஒரு கடைக்காரரிடம் விவாதம் செய்து கடைசியில் 30 ரூபாய் கொடுத்து விட்டு வந்தோம்.

சென்னையின் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து மாறி புதுவையின் அமைதியான எல்லைக்குள் நுழைந்தவுடன் தோன்றியது - "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல
வருமா ???"

0 comments:

Post a Comment