பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை. அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அறிவை எல்லாம் இன்று மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்கள், அதையெல்லாம் எப்படி நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று விளக்குவார்களா ???
ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்
அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமேசான் ஃபயர் என்ற மொபைல் ஃபோன் ஒன்றை...
அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்
அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல...
பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை
பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை. அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை...
ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான்...
மிளகைத் தேடி இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்தார்கள்
சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர்...
குட்டிச்சாத்தான் - அத்தியாயம் 1
அவுங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற தோட்டத்துல சாத்தன் ராத்திரியில பாட்டு பாடி நடக்குமாம். அவுங்க பாரம்பரியமாவே சாத்தன சேவிக்கிற குடும்பம்...
Companion Plants For Tomato
We usually grow companion plants along with other vegetable plants to get more yield from the garden. These companion plants help in the growth of others by attracting beneficial insects which is used to pollinate and repels some insects to save plants...
Sunday, July 20, 2014
பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை
பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை. அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அறிவை எல்லாம் இன்று மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்கள், அதையெல்லாம் எப்படி நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று விளக்குவார்களா ???
புளிய மரங்கள் அழிக்கப்படுவதால் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம்
சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது முதலில் அழிக்கப்படுவது அந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்கள் தான். நான்கு வழிச் சாலைகளை அமைக்க வெட்டிய புளிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை எங்குமே உடனடியாக வைக்கப்படுவதில்லை. அப்படி வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பான்மையானவை புளிய மரங்களே.
புளிய மரங்களின் எண்ணிக்கை குறைவதால், இனி வரும் காலத்தில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம். புளிய மரங்கள் ஒன்றும் இன்று வைத்து விட்டு நாளை பலன் அனுபவிக்கும் மர வகைகள் அல்ல. பலன் கிடைப்பதற்கு நீண்ட வருடங்கள் பிடிக்கும். வருங்காலத்தில் புளி இல்லாமல் சமையல் செய்யும் நிலை கூட வரலாம். புளிசாதம், புளிக் குழம்பு, வற்றல் குழம்பு, மீன் குழம்பு, புளித் துவையல், புளி ஊறுகாய் இதெல்லாம் இனிமேல் கனவாகப் போகிறது. ஆமாம்... பீசா, பர்கர், சமோசா, பரோட்டா, நூடுல்ஸ், இதற்கெல்லாம் புளி எதற்கு ???
இடம்: செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை, ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்
இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள்
இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலேயே நடக்கின்றன. மது அருந்த போகும்போது நடந்தா போக முடியும்? மது அருந்திவிட்டு வீட்டுக்கு போகணும்னா பைக் வேணுமே? நடக்கும் விபத்துகளுக்கு உண்மையான காரணம் drunk & drive தான். உட்கார்ந்து சாவகாசமாக குடிக்க இடம் கிடைப்பதால் தான் நிறைய பேருக்கு குடிக்கவே தோன்றுகிறது. மதுக் கடைகளில் bar இல்லையென்றால் இப்படிப்பட்ட விபத்துகளைக் குறைக்க முடியும்.
அது அரசாங்கமோ அல்லது தனியாரோ, யார் மதுக்கடைகளை திறந்தாலும், யாரையும் கையைப் பிடிச்சு உள்ளே வாங்க வாங்கன்னு கூப்பிடறதில்லை. நம்ம சொந்த பொறுப்புல, விருப்பப்பட்டு தான் அங்கே போறோம். நம்ம பாதுகாப்புக்கு நாம் தான் உத்திரவாதம். நமக்கு தான் இருக்கணும் பொறுப்பு. அதை விட்டுட்டு அரசாங்கம் டாஸ்மாக் திறந்திருக்கிறது, அதனால நான் போயி குடிப்பேன்னு சொல்றது எப்படி இருக்குன்னா... "அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்னு"... சொல்றதுக்கு சமம். கடைசியில் வலியும் வேதனையும் யாருக்கு வரும்? இதை உணர்ந்தால் என்றென்றும் நலமே!
Saturday, July 19, 2014
ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான்.
அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். "ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே" என்றான் துடைக்க வந்தவன்.
"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈ மெயில் முகவரி இல்லையா? ச்சே!" என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் வாங்கி மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவருடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, "ஈமெயில் முகவரி இல்லை" என்று பதிலளிக்க, "ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?" என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
"அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார் வியாபாரி !!!
Wednesday, July 16, 2014
ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்
அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய மொபைல் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது. "அமேசான் ஃபயர்" (Amazon Fire) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஒரு 3D மொபைல் ஆகும். இந்த மொபைலில் பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சம். இது அமேசான் தயாரித்த "ஃபயர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்" (Fire OS) மூலம் இயங்கக்கூடியதாகும்.
இந்த மொபைலின் நான்கு மூலைகளிலும் நான்கு இன்ஃப்ராரெட் சென்சார்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பார்கோட் , பாடல்கள் , நம்பர்கள் முதலிய அனைத்தையும் ஃஸ்கேன் செய்திட முடியும். அமேசான் நிறுவனத்தின் சிறப்பு சேவைகளான எஃஸ்ரே மற்றும் செகண்ட் ஃஸ்கிரீன் ஆகிய சேவைகளும் இந்த மொபைலில் உள்ளது. மேலும் ஏதாவது உணவுப் பொருட்களை அதன் முன் வைத்தால் அந்த உணவின் சத்து அளவை எவ்வளவு என்பதைக் காட்டும். இந்த மொபைலில் உள்ள டைனமிக் பர்ஸ்பெக்டிவ் (Dynamic Perspective) என்ற ஆப்ஷன் மூலம் உங்களது முகத்தை இந்த மொபைல் ஸ்கேன் செய்து கொள்ளும். பின்பு மொபைலை இடதுபுறம் அல்லது வலதுபுறம் எங்கு திருப்பினாலும் மொபைலின் டிஸ்பிளே உங்களை நோக்கியே நகரும்.
இந்த மொபைல் 4.7 இன்ச் திரை அகலம் கொண்ட 2.2 GHz ஸ்னேப் டிராகன் பிராஸஸர் மற்றும் 2GB ரேமுடன் இயங்கக்கூடியதாகும். பின்புற கேமரா 13 MP மற்றும் 2.1MP முன்புற கேமராவுடன் இந்த மொபைல் வெளிவந்திருக்கிறது. அமேசான் நிறுவனம் 32GB மற்றும் 64GBக்கு இன்பில்ட் மெமரியும் வித்தியாசம் கொண்ட இரண்டு மொபைல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மொபைலுக்கு அமேசான் நிறுவனம் அன்லிமிட்டெட் க்ளவுட் ஸ்டோரேஜையும் தருகின்றது. இதன் விலையை அமேசான் நிறுவனம் 32GB க்கு 200 அமெரிக்க டாலர்களும், 64GB க்கு 300 அமெரிக்க டாலர்களையும் நிர்ணயித்துள்ளது. இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட உள்ளது !!!
Tuesday, July 15, 2014
அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா?
உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில் எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார். இதை அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதைப்படிப்பவர்களுக்கு சற்று மனம் கனக்கவேண்டும். அந்த தன்னலமில்லா தலைவன் வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம் ???
Monday, July 14, 2014
தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில் அலை கடல் போன்ற ஓர் ஏரி
புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.
அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.
ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?
இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான்.
அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.
# பொன்னியின் செல்வன்
Sunday, July 13, 2014
அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்
இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான், "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" என்று வர்ணித்தார் என்றால் , சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். எனினும் , நாம் முதன் முதலில் இந்தப் பழம்பெரும் பதிக்குச் செல்லும் சமயத்தில் அதைப் பூரண கோலாகலத் தோற்றத்துடன் கொடுத்து வைத்திருக்கவில்லை. சக்கரவர்த்தி நோய்ப்பட்டுத் தஞ்சை மாநகர் சென்ற பிறகு வெளிநாடுகளிலிருந்து சிற்றரசர்களும் இராஜ தூதர்களும் மந்திரிப் பிரதானிகளும் சேனாதிபதிகளும் இங்கு வருவது நின்று போயிற்று. அவர்களுடன் வழக்கமாக வரும் பரிவாரங்களின் கூட்டமும் குறைந்து விட்டது.
நாலு படை வீடுகளிலும் வசித்த போர் வீரர்களில் பாதிப் பேர் இப்போது ஈழ நாட்டுப் போர்க்களங்களில் தமிழர் வீரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் ஒரு பகுதியார் வடதிசை எல்லையிலும் இன்னொரு பகுதியினர் மதுரையிலும் இருந்தார்கள். எனவே , படைவீட்டுப் பகுதிகளில் இப்போது பெரும்பாலும் வயோதிகர்களும் பெண்மணிகளும் சிறுவர் சிறுமிகளுமே தஞ்சைக்குச் சென்று விட்டபடியால், நகரின் அப்பகுதியானது பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சென்று இருந்தது. இராஜாங்க காரியங்களை நடத்தி வந்த அமைச்சர்கள், சாமந்தகர்கள், அதிகாரிகள் அனைவரும் தத்தம் குடும்பத்தோடு தஞ்சைபுரிக்குச் சென்று விட்டார்கள். இப்படியெல்லாமிருந்த போதிலும் பழையாறை வீதிகளில் கூட்டத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை!
# பொன்னியின் செல்வன்
கோடை வெய்யிலுக்கு ஏற்ற எலுமிச்சை புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் -1
புதினா -1/4 கப்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
இஞ்சி சாறு -1 தேக்கரண்டி
தண்ணீர்
ஐஸ் கட்டி
செய்முறை:
எலுமிச்சை பழத்தைச் சாறு எடுத்துக் கொள்ளவும். புதினாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதை வடித்து விட்டு அதனுடன் ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான சத்தான ஜீரண சக்தியைத் தூண்டக் கூடிய ஜூஸ் ரெடி !!!
Saturday, July 12, 2014
நாங்க கோதுமை கொடுக்கறோம் நீங்க கடற்கரை மணல் கொடுங்க
சீனாவுடன் 1960 களில் நடந்த போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது. அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு
அனுப்பியது. என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம்.
அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார்.
அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது. இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியாக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் இணைத்து விட்டார்.
தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார். அமெரிக்காவின் இந்த சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்தது. அதற்கு பிறகு சிறிது சிறிதாக இந்தியா அப்போதைய சோவியத் யூனியனுடன் நெருங்கி செல்ல ஆரம்பித்தது. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்!
Friday, July 11, 2014
நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது
சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும்.
எது அந்த தவளையை கொன்றது? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது. ஏன் என்றால் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும்.
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனரீதியாக, உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர். உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.
நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது !!!
கொடுமையான நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம்
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். இந்த மஞ்சள் வாழைப்பழம் பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும்
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் - தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.
இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது. திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.
இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும். அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்!
சதுரகிரி எங்கே இருக்கிறது?
ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் வரும் சிற்றூர் கிருஷ்ணன்கோவில். இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவு பயணித்தால், வத்திராயிருப்பு (வத்ராப்) வரும். அங்கிருந்து இன்னும் 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறை என்ற மலைவாழ் மக்களினின் கிராமத்தை அடையலாம். இதுதான் சதுரகிரியின் அடிவாரம். இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவு மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரியை அடையலாம்.
மதுரையில் இருந்து திருமங்கலம், டி. கல்லுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு வழியாகவும் தாணிப்பாறையை அடையலாம். இப்படி வந்தால் சுமார் 77 கி.மீ தூரம். விருதுநகரிலிருந்து தாணிப்பாறைக்கு சுமார் 33 கி.மீ. தொலைவு. சதுரகிரிக்கு செல்ல வேறு இரண்டு வழிகளுண்டு. ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான். இந்த வழிதான் மிகவும் பாதுகாப்பானது, எப்போதும் மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்.
சென்னையிலிருந்து செல்பவர்கள் "முத்துநகர் எக்ஸ்பிரஸ்" பிடித்து நேராக சென்னையிலிருந்து விருதுநகர் இறங்கி அங்கிருந்து தாணிப்பாறைக்கு பஸ் பிடித்து செல்லலாம். அல்லது "பொதிகை எக்ஸ்பிரஸ்" மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி அங்கிருந்தும் தாணிப்பாறை செல்லலாம். அது தான் சதுரகிரி மலையின் அடிவாரம். அங்கிருந்து மலை மேலே ஏறுவதற்கு மூன்றரை முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். முதன் முறை செல்பவர்களுக்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகலாம்!
Thursday, July 10, 2014
ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?
இந்த இங்கிலீஷை தாய் மொழியா படிச்சவங்களுக்கு இருக்கற ஒரு நினைப்பு என்னன்னா, உலகத்துல எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம் அப்படிங்கறது தான். அதனால அவங்களுக்கு மற்ற மொழி பேசறவங்களைக் கண்டால் கொஞ்சம் இளக்காரம் தான்.
அதை வெளிக்காட்டுற மாதிரி "இங்கிலீஷ்.. விங்கிலீஷ்" என்ற திரைப்படத்தில் வரும் ஒரு வசனம், "ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?" என்று அமெரிக்க அதிகாரி கேட்டதும், நீங்க தமிழ் தெரியாம இங்கே இல்லையா என்று பதிலுக்குக் கேட்கிறார் இந்திய அதிகாரி!
இங்கே வரும் அமெரிக்கன்ஸ் எல்லாம் ஹிந்தியோ, தமிழோ தெரிஞ்சுகிட்டா வராங்க? ரொம்ப தான் பந்தா பண்றாங்க இந்த அமெரிக்கன்ஸ்! நமக்காவது இந்தியான்னு ஒரு அழகான பெயர் இருக்கு. அவங்க நாட்டுக்கு உருப்படியா ஒரு பேரு இருக்கா? அவங்கல்லாம் ஆசியாவுல இருந்தா ஆசிய ஐக்கிய நாடுகள், ஆப்பிரிக்காவுல இருந்தா ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகள்ன்னு பேரு வச்சுக்குவாங்களோ?
Wednesday, July 09, 2014
நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
டிவிட்டர்ல ரொம்ப நாளைக்கு முன்னால அது எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு போனேன். அங்க போயி பார்த்தால், ஏதோ ஒரு வெப்சைட்ல இருந்து இலவசமா SMS அனுப்பறமாதிரி ஒரு ஃபீலிங். 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். எனக்கு SMS அனுப்பறதே பிடிக்காது. இதுல அங்கே போயும் அதையே தான் செய்யணுமா? அதை விட பேஸ்புக் எவ்வளவோ தேவலாம்னு தோணிச்சு. டிவிட்டர்ல இருக்கறவங்க என்ன பேசிக்கறாங்க, யார் கூட பேசிக்கறாங்க, அப்புறம் அந்த ஹாஷ் டேக், இதெல்லாம் சத்தியமா ஒண்ணுமே புரியல. விட்டா போதும்ன்னு அப்போவே ஓடோடி வந்துட்டேன். அதோட டிவிட்டரை மறந்துட்டு பேஸ்புக்லேயே ஐக்கியமாகிட்டேன். ஏறக்குறைய ஆயிரம் நண்பர்கள், ஒரு நாற்பது குரூப்புகள், நூறு இருநூறு பக்கங்கள், என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன்.
திடீர்ன்னு ஒரு நாள், "உங்களைக் காணாமல் தவிக்கிறோம், உடனடியாக எங்கிருந்தாலும் வருக" அப்படிங்கற மாதிரி, கிராமத்துல மைக் செட்ல சொல்லுவாங்களே "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்" அந்த மாதிரி டிவிட்டர்ல இருந்து இ-மெயில் அடிக்கடி என் இன்பாக்ஸ்க்கு வருது. நான்தான் அங்க அக்கௌண்ட் இருக்கறதையே மறந்து ரொம்ப நாளாச்சே? அந்த இ-மெயில்ல Suggestions for you to follow ன்னு ஒரு சில பிரபலங்களோட லிஸ்ட் கொடுத்துருக்காங்க. அந்த லிஸ்ட்ல அபிஷேக் பச்சன் கூட இருக்காரு. இது என்னடா வம்பா போச்சே... நம்மள ஆசை காட்டி அழைக்கறாங்களே... போகலாமான்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான் அங்க இருந்த சில டிவிட்டர்களுக்கும் ஒரு பிரபலத்துக்கும் "பிரச்சினை" வந்து ஒரே பரபரப்பா இருந்துச்சு. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நினச்சு அதோட டிவிட்டரை ஓரேயடியா மறந்துட்டு, நமக்கு பேஸ்புக் தான் எப்போவும் சிறந்ததுன்னு முடிவு பண்ணிட்டேன்.
நான் இங்கே பேஸ்புக்லேயே சந்தோஷமா தானே இருக்கேன்? என்னை எதுக்குப்பா டிவிட்டர்க்கு வரச் சொல்லி அங்க இருக்கற பிரபலங்களோட மாட்டி விடறீங்க? மனுஷன் நிம்மதியா இங்கேயே இயற்கை விவசாயம், கத்தரிக்காய், டெங்கு காய்ச்சல், பவர்-கட், இன்வெர்ட்டர், சோலார் பேனல்... இப்படி ஏதாவது பிரச்சினை வராத ஒரு ஸ்டேட்டஸ் தினமும் போட்டுட்டு நிம்மதியா இருந்துக்கறேனே... என்னை விட்டுங்கப்பா !!!
# பேஸ்புக் தான் எப்போவும் நல்லது
இதுக்கும் ஒரு சப்-டைட்டில் போடணும்
படம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து அடிக்கடி வந்துகிட்டே இருக்கற இந்த சப்-டைட்டில் இம்சை தாங்க முடியல. பரவாயில்லையே... நம்ம அரசாங்கத்துக்கு நம்ம மக்கள் மேலே இவ்வளவு கரிசனமா? இதுவும் நல்ல விஷயம் தானேன்னு அதை மறந்துட்டு படம் பார்க்கலாம்ன்னா... ஒரு விஷயம் மட்டும் கண்ணை உறுத்துச்சு. அது என்னன்னா...
- புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்
- புகை பிடித்தல் உயிரைக் கொல்லும்
- மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு
இப்படி எல்லாம் படம் முழுவதும் சப்-டைட்டில் போட்டுவிட்டு, அந்த வில்லன் கூட்டத்தை எல்லாம் தனியாக ஒரே ஆளாக துப்பாக்கியால் அந்த "மங்காத்தா" ஹீரோ சுட்டுக் கொல்வதற்கு மட்டும்...
- மனிதர்களை சுட்டுக் கொல்வது குற்றம்
# என்ன லாஜிக் இது ???
சென்னையில் ஷேர் ஆட்டோவில் சுகமான பயணம்
சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் கட்டணம் குறைவாகத்தான் இயங்குகின்றன. எல்லாமே புதிய வண்டிகள். சுத்தமாகவும் நல்ல பராமரிப்புடனும் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஷேர் ஆட்டோக்களை விட சென்னையில் ஷேர் ஆடோக்கள் நன்றாக இருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 7 பயணிகளை மட்டுமே ஏற்றுகிறார்கள். ஆனால் புதுச்சேரியிலோ 12 பேர் வரை திணித்துக்கொண்டு போவார்கள். சென்னையில் ஆட்டோ கட்டணம் புதுச்சேரியை விட சற்று குறைவு தான். திரும்பும் போது ஆட்டோவில் 4 கிலோமீட்டர் வரை சென்றதுக்கு வெறும் 60 ரூபாய் மட்டுமே கேட்டார் ஒரு (பிழைக்க தெரியாத?) ஆட்டோ டிரைவர். அவருக்கு 70 ரூபாயாகக் கொடுத்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் முதல் முறையாக நுழைந்தோம். இதுவரை அங்கு செல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு நல்ல காட்சி - கட்டணமில்லா (ஒரளவு சுத்தமான) இலவச கழிப்பறை. ஒரு எரிச்சலூட்டும் விஷயம் - பேருந்து நிலையத்தினுள்ளே கடைகளில் இரண்டு மடங்கு விலை. 25 ரூபாய் MRP விலையுள்ள ஒரு 2 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் விலை 38 ரூபாய் கேட்ட ஒரு கடைக்காரரிடம் விவாதம் செய்து கடைசியில் 30 ரூபாய் கொடுத்து விட்டு வந்தோம்.
சென்னையின் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து மாறி புதுவையின் அமைதியான எல்லைக்குள் நுழைந்தவுடன் தோன்றியது - "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ???"
மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுங்க சார்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு சங்கம் இருப்பதைப்போல டூ வீலர் ஒட்டுபவர்களுக்கும் ஒரு சங்கம் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா?
பெட்ரோல் விற்கும் விலையில் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவது சாத்தியமில்லை என சொல்லும் ஆட்டோ ஓட்டுனர்களே, ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். பக்கத்து மாநிலம் கேரளாவில் உள்ள ஆட்டோ கட்டணத்தை நம்மூரில் நீங்கள் வாங்கும் கட்டணத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். கேரளாவில் உள்ளதை விட பெட்ரோல் விலை தமிழகம், புதுச்சேரியில் குறைவு தான்.
மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்க சொல்லும் நீங்கள், ஒரு டீ கடைக்கு சென்றால் அங்கே டீ கடைக்காரர் உங்களிடம் ஒரு ரூபாய் அதிகமாக போட்டு கொடுக்க சொன்னால், நீங்கள் பெருந்தன்மையாக தருவீர்களா?
Tuesday, July 08, 2014
ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்
"ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்"னு ஆற்காடு நவாபுகிட்ட வெள்ளக்காரன் கேட்டான். கடல் தாண்டி யாவாரம் பண்ண வந்தவங்களுக்கு இது கூடவா செய்யக்கூடாதுனு நெனச்சு. "சரி, எந்த எடம் வேணும்?"னு நவாபு கேட்டாரு. வெவரமான வெள்ளக்காரன், கையோட கொண்டுவந்த ஆட்டுத்தோல அவருக்கு முன்ன விரிச்சுக் காட்டினான்.
அதுல ஊரு, ஆறு, குளங்குட்ட, கடலு, மல, ரஸ்தா எல்லாமே கோடு கோடா வரஞ்சிருந்தாங்க. அதுல... ஆத்து ஓரமா இருக்கற ஒரு எடத்தக்காட்டி, "இந்த எடம் குத்தகைக்கு வேணும்"னு வெள்ளக்காரன் கேட்டான். "ஆட்டுத்தோலால வருது நாட்டுக்கு நட்டம்"னு அப்போ நவாபுக்கு தெரியாது. "சரி"னு சொல்லிட்டாரு.
"இனி நீங்க சனங்ககிட்ட வரி வசூல் பண்ணி கஷ்டப்பட வேணாம்... நாங்களே பண்ணிக்கறோம். இந்தா பிடிங்க ரொக்கப் பணம்"னு நவாபுக்கு கடன் கொடுத்தாங்க. "குதிரை, யானை, பூனைய எல்லாத்தையும் நாங்களே மேச்சுக்கறோம்"னு அதுக்கும் பணத்த கொடுத்த வெள்ளைக்காரன், நவாபுகிட்ட இருந்த அம்புட்டையும் கிட்டத்தட்ட ஏச்சு வாங்கிப்போட்டான்.
குட்டிக் குட்டி ராசாகிட்ட கலகத்தை தூண்டிவிட்டு அவங்களையும் வெரட்டி நாட்டையும் சேனையையும் சேத்துக்கிட்டான்.
ராசாக்களை எல்லாம் ஒழிச்சான். கோட்டை கொத்தளங்க அம்புட்டையும் இடிச்சான். எல்லா பாளயப்பட்டக்காரங்களுக்கும் "நெரந்தர நிலத்தீர்வைத் திட்டம்"னு கொண்டுவந்தான் வெள்ளக்காரன்.
மதுர மீனாட்சி கோபுரத்தையும் சிவகெங்கை சேனை ஆட்களையும் கருப்பு மல்லிகைப் பூ மாதிரி சுயலெட்சணமா இருந்த பொம்பளைகளையும், மலைல வெளையுர ஏலங்கிராம்பு, வாசனைத் திரவியம், தேனு, தேனமாவுனு தின்பண்டத்தையும் பாத்து அனுபவிச்ச வெள்ளக்காரன் பாளயக்காரங்களுக்கு நெலத்தப் பிரிச்சுக் குடுத்து வருமானத்தப் பெருக்கணும்னு முடிவு பண்ணிட்டான். பணிஞ்சு போன பாளயக்காரங்களுக்கு "ஜமீன்தார்"னு பேர் வச்சாங்க !!!
# வருஷ நாட்டு ஜமீன் கதை
முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
முட்டை என்பது ஒரு உயிர் தழைத்து கருவாகி, குஞ்சாகி பிறக்க தேவையான மூலசத்துக்கள் அனைத்தையும் கொண்ட இயற்கை அன்னையின் லஞ்ச் பேக். அதன் நன்மைகள் அளவிட முடியாதது. ஆய்வு ஒன்றில் தினம் 2 முட்டை, 6 வாரம் தொடர்ந்து உண்பது நல்ல எச்.டி.எல் கொலஸ்டிராலை 10% வரை உயர்த்தும் என கண்டறியப்பட்டது.
முட்டை எல்.டி.எல் கொலஸ்டிராலையும் உயர்த்தும். ஆனால் இப்படி நிகழ்வது உண்மையிலேயே பாதுகாப்பானது. உங்கள் உணவு "லோ கார்ப்" உணவாக இருந்து அதில் முட்டையும் இடம்பெற்றால் ஆபத்தான சின்ன சைஸ் எல்.டி.எல்லை முட்டை ஆபத்தற்ற பெரிய சைD எல்.டி.எல் ஆக்கும். இது இதயத்துக்கு நல்லது
கோலின் (choline) என்பது மிக முக்கிய மூலபொருள். நம் செல்களின் அடிப்படை கட்டுமானத்தை கட்டிக்காப்பதே கோலின் தான். கோலின் பற்றாக்குறையே ஃபேட்டி லிவர் வியாதி, அல்சைமர் முதல் பல வியாதிகளுக்கு காரணம். ஒரு முட்டையில் 180 கிராம் பிராக்கோலி அல்லது 1 லிட்டர் பாலில் இருக்கும் கோலினுக்கு சமமான கோலின் உள்ளது. பிராக்கோலியும் பாலும் மட்டுமே சைவ உணவுகளில் கோலின் ஓரளவு இருக்கும் உணவுகள்.
முட்டையில் உள்ள வைட்டமின் ஏ உடலால் எளிதில் கிரகிக்கப்படும் ரெட்டினால் வடிவில் உள்ளது. கேரட், கீரையில் வைட்டமின் "ஏ" இருப்பதாக கூறபட்டாலும் அதில் வைட்டமின் "ஏ" இல்லை. பீட்டா காரடின் மட்டுமே உள்ளது. குழந்தைகள், டயாபெடிக்ஸ் உள்ளவர்கள், தையிராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உடல் காரட்டினை வைட்டமின் "ஏ" வாக மாற்றுவது இல்லை. அவர்கள் முட்டை உண்பதன் மூலம் வைட்டமின் "ஏ" சத்துகளை அடையலாம்.
இதுபோக முட்டையில் லூடின், ஸியாக்ஸாந்தின் ( Lutein and Zeaxanthin) எனும் இரு முக்கிய ஆண்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை கண்ணின் கருவிழி பார்வையை கூர்மைப்படுத்துவதுடன் நில்லாமல் காட்ராக்ட் வருவதையும் தடுக்கின்றன. ஆனால், கேல் போன்ற கீரைகளில் முட்டையை விட பல மடங்கு அதிகமாக இந்த இரு ஆண்டி-ஆக்சிடண்டுகளும் உள்ளன. 100 கிராம் கேரட்டில் 2 முட்டைக்கு சற்று குறைந்த அளவில் இந்த இரு ஆண்டி-ஆக்சிடண்டுகளும் உள்ளன. அதனால் கேரட் உண்பது கண்ணுக்கு நல்லது. ஆனால் அதற்கு காரணம் அதில் இருப்பதாக கருதப்படும் வைட்டமின் "ஏ" அல்ல.
ஆய்வு ஒன்றில் தினம் 1.3 முட்டையை 4 வாரம் உண்டால் இந்த இரு ஆண்டி-ஆக்சிடண்டுகள் நம் ரத்தத்தில் இருக்கும் சதவிகிதம் சுமார் இரு மடங்கு வரை அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. முட்டை ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கும். தாய்ப்பாலில் கிடைக்கும் புரதத்தை விட மிக தரமான புரதம் முட்டையில் உள்ளது. குறைந்த அளவில் உண்டும் பசியை கட்டுபடுத்தும் உணவுகளின் பட்டியலில் முட்டை முதலிடத்தை பிடித்துள்ளது.
அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது!
ரிலயன்ஸ் டேட்டா கார்டு
Monday, July 07, 2014
மிளகைத் தேடி இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்தார்கள்
சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் மிளகு வணிகத்திற்காக மலபார் பகுதிகளில் போர் நடத்திய போது அவர்களை தீவிரமாக எதிர்த்த மலபார்-கோட்டயத்தின் சிற்றரசரான கேரளவர்மா பழசி ராஜா, தனது நாட்டில் பயிரிடப்பட்டிருந்த மிளகு கொடிகளை வெட்டி எரித்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கைப்பிடி மிளகு வாங்குவதற்காக தங்கத்தையே அள்ளித்தந்தவர்கள் ஐரோப்பியர்கள். அப்படிப்பட்ட பாரம்பர்யமிக்க, கறுப்புத் தங்கம் என்றழைக்கப்பட்ட மிளகை தனியாக எடுத்து வைத்துவிட்டு நாம் வெண்பொங்கல் சாப்பிடுகிறோமே... இது சரியா ???
புரதசத்துள்ள காளான் உணவு
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. காளான் மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்
அந்த அளவுக்கு அந்த நாடுகளில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு விழிப்புணர்வுடன் இருக்கிறது. ஆனால், மேலைநாட்டு இறக்குமதியான கொக்கோ கோலா, பெப்சி முதலிய குளிர்பான உயிர்க்கொல்லிகளை இங்கே தடையில்லாமல், ஒரு கட்டுப்பாடுமில்லாமல் விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அதைக் குடிப்பது இந்த சமூகத்தில் ஒரு கௌரவமான விஷயம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மீடியாக்கள் உதவியுடன் தோற்றுவித்திருக்கிறார்கள்.
சதுரகிரி மலைக்கு ஒரு பயணம்
சதுரகிரிக்கு செல்ல பல வழிகள் இருந்தாலும் தாணிப்பாறையிலிருந்து தொடங்கும் மலைப்பாதை தான் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. சென்னையிலிருந்து செல்பவர்களுக்கு விருதுநகர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அங்கிருந்து வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை செல்வதுதான் சிறந்தது. சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் இறங்கவேண்டும் அல்லது முத்துநகர் எக்ஸ்பிரஸில் சென்றால் விருதுநகர் இறங்க வேண்டும். தாணிப்பாறை என்ற இடத்திலிருந்து தான் சதுரகிரிக்கான மலைப்பாதை தொடங்குகிறது. வழக்கமாக நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாகத்தான் எப்பொழுதும் போவோம். அது தான் மிகவும் வசதியாகவும் இருக்கும். இந்த முறை ரயிலில் நாங்கள் புறப்படும் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்பதிவு கிடைக்கவில்லை. அதனால் விருதுநகருக்கு முன்பதிவு செய்து விட்டோம். விருதுநகரில் இறங்கி அங்கிருந்து தான் தாணிப்பாறைக்கு செல்லவேண்டும். இந்த வழியில் இதுவரை சென்றதில்லை, இது தான் முதல் முறை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் தாணிப்பாறை என்ற வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து சுமார் 12 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்றால் சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரி மலையை அடையலாம். மலைப் பயணத்திற்கு தேவையான தண்ணீர், க்ளுகோஸ், சாக்லேட்டுகள், முதலியவற்றை கையோடு கொண்டு செல்வது நல்லது. மலையில் இரவில் தங்குவதற்கு விரும்புபவர்கள் அவசியம் ஒரு டார்ச் லைட் எடுத்துக்கொண்டு போக வேண்டும். வேகமாக மலையேறாமல் மிகவும் நிதானமாக ஏறினால் களைப்பின்றி விரைவில் சென்று விடலாம். காலையில் 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக தாணிப்பாறையிலிருந்து நடக்கத் தொடங்கினால் மதியம் 12 அல்லது 1 மணிக்குள்ளாக சென்று விடலாம்.
முதல் முறையாக மலை ஏறுபவர்களுக்கு 5 - 6 மணி நேரம் வரை ஆகும். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கே செல்பவர்கள் அதிகம். எனவே முதன் முதலாக செல்பவர்கள் அந்த நாட்களில் செல்வது நல்லது. மலையில் அங்காங்கே சிறிய கடைகள் உள்ளன. அங்கிருந்து சாப்பிடத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். செல்லும் வழியில் ஆங்காங்கே இலவசமாகவே உண்பதற்கு சுண்டல், தயிர்சாதம், பொங்கல் முதலியவற்றை தருகிறார்கள். மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள ஒரு காளி கோவிலிலிருந்தும் மலையின் மேல் உள்ள கஞ்சி மடம் என்ற இடத்திலிருந்தும் அங்கே செல்பவர்களுக்கு இலவசமாகவே எந்த நேரத்திலும் உணவு கிடைக்கிறது. அதனால், கீழே இருந்து உணவு எடுத்துக்கொண்டு சுமந்து செல்ல நேம்டிய அவசியம் இல்லை. சற்று கடினமான மலைப் பயணம் என்பதால் முடிந்தவரை அதிக எடையுள்ள பொருட்களை சுமக்காமல் மலை ஏறுவது நல்லது.
நாவல் ஊற்று |
மலை உச்சியில் சுந்தர மகாலிங்கம் கோவில், மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. அதற்கும் மேலே சென்றால் அங்கே வனகாளி கோவில், பெரிய மகாலிங்கம் முதலியவற்றைக் காணலாம். இன்னும் மேலே போனால் தவசிப்பாறை என்னும் ஒரு குகை உள்ளது. அந்த குகையில் சித்தர்கள் இன்றும் அரூபமாக தவம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்ற முறை சதுரகிரி சென்றபோது அங்கு செல்ல சரியான துணை கிடைக்காததால் அந்த குகைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த காட்டில் வசிக்கும் பளியர்கள் என்னும் மலைவாசிகளின் துணையோடுதான் அங்கே செல்ல வேண்டும். மிகவும் ஆபத்தான, செங்குத்தான மலைப்பாதை. வனவிலங்குகள் குறிப்பாக கரடிகள் அங்கே அதிகம் உலாவுகின்றன என்று சொல்கிறார்கள் . இந்த முறை அங்கே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை செல்லும் பொது அங்கேயும் சென்று விட்டு வரவேண்டும்.
இரவில் அங்கே தங்கிவிட்டு வருவது மிகவும் நல்லது. இரவில் சுத்தமான காற்று, மூலிகை மணத்துடன் வீசுகிறது. பத்து கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து விட்டு திரும்பும்போது மூலிகை காற்றை சுவாசித்துவிட்டு, மூலிகை கலந்த சுனை நீரை அருந்திவிட்டு வரும்போது உடலும் உள்ளமும் தூய்மையாகும். தெளிவான மனநிலையும், உடலுக்கு பலமும் கிடைக்கும். சதுரகிரிக்கு சென்று விட்டு திரும்பும்போது ஒரு புதிய உலகத்துக்கு சென்று வந்தது போல தோன்றும். ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது ஆன்மீக சொர்க்க பூமி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு அது ஒரு இனிய மலைப் பயணம். மொத்தத்தில், அனைவரும் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய அருமையான இடம் சதுரகிரி மலை!